கீரணூர் குளம் தூர்வாரும் பணி

ஆத்தூர் அருகே கீரணூர் குளம் தூர்வாரும் பணி தொடங்கியது.

Update: 2017-04-29 20:30 GMT

ஆறுமுகநேரி,

ஆத்தூர் அருகே கீரணூர் குளம் தூர்வாரும் பணி தொடங்கியது.

தூர்வாரும் பணி

ஆத்தூர் அருகே உள்ள கீரணூர் குளம் சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் சுற்று வட்டார கிராமங்களில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது இந்த குளம் முழுவதும் அமலை செடிகள், சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதையடுத்து பொதுப்பணித்துறை, வருவாய் துறை மற்றும் தன்னார்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து, கீரணூர் குளத்தை தூர்வாரும் பணியை நேற்று தொடங்கினர்.

மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கி, குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் குளத்தில் உள்ள அமலை செடிகள், கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஏராளமான விவசாயிகளும், பொதுமக்களும் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கரம்பை மணல் அள்ள அனுமதி

பின்னர் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் துறை சார்பில் 8 கண்மாய்களும், ஊரக வளர்ச்சி துறை சார்பில் 32 குளங்களும் தூர்வாரப்படும். கண்மாய்கள், குளங்களில் 1½ மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தப்படும். இதன்மூலம் விவசாயிகள் முப்போக விவசாயம் செய்ய முடியும்.

தூத்துக்குடி– திருச்செந்தூர் ரோட்டில் உள்ள கீரணூர் குளத்தை தூர்வாரி, தண்ணீர் நிரப்பும்போது, அந்த வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். விவசாயிகள் வருவாய் துறையினரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து, குளங்களில் அனுமதிக்கப்பட்ட அளவு கரம்பை மணலை எடுத்து கொள்ளலாம். முக்காணியில் தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.

உதவி கலெக்டர்கள்

இதில் உதவி கலெக்டர்கள் தீபக் ஜேக்கப் (தூத்துக்குடி), தியாகராஜன் (திருச்செந்தூர்), தாசில்தார் அழகர், யூனியன் ஆணையாளர்கள் அரவிந்தன், பாண்டியராஜன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் இளமதி, ஆத்தூர் குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் அருள்ராஜ், செயலாளர் முருகேசன், ஆத்தூர் கஸ்பா விவசாயிகள் சங்க தலைவர் ராஜேஷ், செயலாளர் சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்