மணல் லாரி மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பலி

தென்காசி அருகே மணல் லாரி மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பலியானார். லாரிகள் வேகமாக வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-27 21:00 GMT

தென்காசி,

தென்காசி அருகே மணல் லாரி மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உடல் நசுங்கி பலியானார். லாரிகள் வேகமாக வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி லாரி மோதி பலி

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள புல்லுக்காட்டுவலசை தெற்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் மனிஷா(வயது 19). இவர் தென்காசி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகே‌ஷன் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் காலையில் ஊரில் இருந்து சைக்கிளில் மத்தளம்பாறை வந்து அங்கிருந்து பஸ்சில் ஏறி கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

வழக்கம்போல் நேற்று காலை இவர் ஊரில் இருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மத்தளம்பாறை வந்தபோது அந்த வழியாக தென்காசி நோக்கி மணல் ஏற்றி வந்த லாரி மாணவி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மனிஷா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல் போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலையில் லாரிகள் அதிக வேகமாக வருவதால் இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும், வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இந்த மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டம் குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் விபத்தில் மாணவி இறந்தது குறித்து அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த மாணவியின் பெற்றோர் தங்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இறந்தது. பின்னர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரி டிரைவரான சிவராமபேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜாவை (26) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணல் லாரி மோதி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்