திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதியில் மறியல் போராட்டம்: எம்.எல்.ஏ. உள்பட 423 பேர் கைது

திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதியில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 423 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-04-25 23:00 GMT
திருச்செந்தூர்,

விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து,  நேற்று திருச்செந்தூர், கோவில்பட்டி, ஏரல், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, குரும்பூர், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், எட்டயபுரம், கழுகுமலை, ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பெட்டிக்கடைகள், டீக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆட்டோக் கள் பெரும்பாலும் ஓடவில்லை. பகல் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

எம்.எல்.ஏ. கைது

திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பு, எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று காலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கோ‌ஷங் கள் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து எம்.எல்.ஏ. தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் திருச்செந்தூர் செங்குழி ரமேஷ், உடன்குடி பாலசிங், நகர செயலாளர் மந்திரம், வக்கீல் பிரிவு ஜெபராஜ், ஆறுமுகநேரி டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் நடேச ஆதித்தன், ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சண்முகவேல் உட்பட 95 பேரை  துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே 2–வது கட்டமாக பஸ்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட  9 தி.மு.கவினரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி நகரசபை டவுன் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நகர செயலாளர் கருணாநிதி, மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், நகர தலைவர் சண்முகராஜ், மாவட்ட செயலாளர் தங்க மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் முருகன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலளர் கதிரேசன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை நகர செயலாளர் பாட்ஷா, பெருந்தலைவர் மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் நாராயண சாமி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செண்பகராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் காஜா மீரான் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

எட்டயபுரம்

எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் பாரதி கணேசன் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். அயன்வடமலாபுரத்தில் முன்னாள் பஞ்சாயத்து  தலைவர் வரதராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை மாசார்பட்டி போலீசார் கைது செய்தனர்.

குரும்பூரில் தி.மு.க ஒன்றிய செயலாளர் நவீன்குமார், பொருளாளர் பாதாள முத்து ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏரல்

ஏரல் காந்தி சிலை பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க ஒன்றிய செயலாளர் ரவி,  நகர காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் அலி, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் பெஸ்டி உள்பட 40 பேரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2.30 மணிக்கு நெல்லைக்கு புறப்பட இருந்த பயணிகள் ரெயிலை மறிக்க முயன்றனர். இந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு முயன்ற 40 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் போசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்