தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டம்: எம்.எல்.ஏ. உள்பட 134 பேர் கைது

தூத்துக்குடியில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட கீதாஜீவன், எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 134 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-25 22:45 GMT
தூத்துக்குடி,

விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் விடுத்திருந்த கடையடைப்பு போராட்டத்தை ஒட்டி, நேற்று தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு உள்பட பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கிராமப்புறங்களில் ஆங்காங்கே சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

மார்க்கெட் திறப்பு

தூத்துக்குடி காமராஜ் காய்கனி மார்க்கெட் திறக்கப்பட்டு இருந்தது. அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் வழக்கம் போல் இயங்கின. அனைத்து கண்டெய்னர் லாரிகளும் இயங்கின. அதே நேரத்தில் நகர்புறத்தில் சரக்கு லாரிகள் குறைந்த அளவே இயங்கின. இந்த பொது வேலை நிறுத்தம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பகல் நேர சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

சாலை மறியல்

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநில தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அருள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் அர்ச்சுனன், மாநகர செயலாளர் ராஜா, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ. கைது

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட  கீதாஜீவன் எம்.எல்.ஏ உள்பட 134 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்