‘அரசின் சட்டவிதிகளை மீறி செயல்படுகிறார்’ நாராயணசாமி மீது கவர்னர் குற்றச்சாட்டு

புதுவை கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Update: 2017-04-24 23:30 GMT

புதுச்சேரி

புதுவை கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவினால் நெடுஞ்சாலைகளில் தற்போது 150–க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் புதுவை மாநில வருவாய் குறைந்துள்ளது. எனவே இந்த நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலையாக அறிவிக்கும்படி மத்திய தரைவழி அமைச்சகத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதம் கவர்னரின் கிரண்பெடியின் ஒப்புதல் பெறாமல் நேரடியாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது விதிமுறைகளை மீறிய செயல் என்று கவர்னர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் (வாட்ஸ் அப்) அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கவர்னர் கிரண்பெடி, தேசிய நெடுஞ்சாலைகளை மறுவகைப்படுத்துதல் தொடர்பாக கொள்கை முடிவு எடுத்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதும்போது யூனியன் பிரதேச நிர்வாகியான எனக்கு தெரிவிக்கவேண்டும். ஆனால் அதை மீறி முதல்–அமைச்சர் செயல்பட்டுள்ளார். ‘கவர்னர் பார்வைக்கு’ என்று துறை செயலாளர் குறிப்பு எழுதியும் அதை முதல்–அமைச்சர் ஒதுக்கியுள்ளார்.

மத்திய அரசுடன் முக்கிய கொள்கை முடிவுகள் தொடர்பாக தகவல் பரிமாற்றம் நடந்தால் கவர்னருக்கும் தெரிவிக்கவேண்டும் என்பது பணி விதியாகும். ஆனால் அதை மீறி முதல்–அமைச்சர் செயல்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்