மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 240 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும்

மோர்தானா அணையில் இருந்து வருகிற 29–ந் தேதி வரை வினாடிக்கு 240 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

Update: 2017-04-23 00:13 GMT

குடியாத்தம்

மோர்தானா அணையில் இருந்து வருகிற 29–ந் தேதி வரை வினாடிக்கு 240 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

மோர்தானா அணை

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக மோர்தானா அணை உள்ளது. குடியாத்தத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில், இந்த அணை கவுன்டன்ய மகா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புங்கனூர், பலமநேர், நாயக்கனேரி காட்டுப்பகுதிகளில் மழை பெய்தால் அதில் இருந்து கவுன்டன்ய மகாநதியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் இந்த அணையில் தேக்கப்படுகிறது.

392 மீட்டர் நீளம் உள்ள இந்த அணையின் முழு உயரம் 23.89 மீட்டர். இதன் நீர்த்தேக்க உயரம் 11.5 மீட்டர் ஆகும். தற்போது அணையில் சுமார் 9 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் வாட்டி வதைக்கிறது. மழை பொய்த்து விட்டதால், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது. இதனால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக மோர்தானா அணை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

240 கனஅடி தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் மோர்தானா அணையை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று மோர்தானா அணையை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன், எம்.எல்.ஏ.க்கள் என்.ஜி.பார்த்திபன், ஜெயந்திபத்மநாபன், லோகநாதன், பாலசுப்பிரமணியம், முன்னாள் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ராமு, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரப்பிரிவு) கண்காணிப்பு பொறியாளர் கே.ஆர்.ராமகிருஷ்ணன், செயற்பொறியாளர் அன்பரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அதைதொடர்ந்து அமைச்சர் வீரமணி பேசியதாவது:–

குடிநீர் பஞ்சத்தை போக்கிடவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் தற்போது மோர்தானா அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் தற்போது சுமார் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 240 கனஅடி வீதம் 29–ந் தேதி காலை 8 மணி வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதாவது கவுன்டன்ய ஆற்றில் 100 கனஅடி வீதமும், வலது மற்றும் இடது புற கால்வாய்கள் மூலம் தலா 70 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் சுமார் 11 ஏரிகளும், அதனை நம்பி உள்ள 40–க்கும் மேற்பட்ட கிராமங்களும், குடியாத்தம் நகரமும் நீர் ஆதாரம் பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி செயற்பொறியாளர் பாபுசுரேஷ்வர்மன், உதவி பொறியாளர் கோபி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் டி.சிவா, கே.எம்.ஐ. சீனிவாசன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் எம்.பாஸ்கர், இமகிரி பாபு, ஆர்.மூர்த்தி, சாத்தூர் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்