தாராசுரத்தில் குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட 62 மின்மோட்டார்கள் பறிமுதல்

தாராசுரத்தில் விதிகளை மீறி குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட 62 மின் மோட்டார்களை பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2017-04-22 23:00 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பேரூராட்சி பகுதியில் குடிநீர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் தாராசுரம் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல வீடுகளில் குடிநீர் இணைப்பில் விதிமுறைகளை மீறி மின்மோட்டாரை பொருத்தி குடிநீர் கூடுதலாக உறிஞ்சப்படுவதால், குடிநீர் கிடைக்காதது தெரியவந்தது.

இதையடுத்து குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட மின் மோட்டார்களை பறிமுதல் செய்யும்படி தஞ்சை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோவன் தாராசுரம் பேரூராட்சி பகுதியில் சோதனை நடத்துவதற்கு சிறப்பு குழுவை நியமித்தார். இக்குழுவில் பேரூராட்சி செயல் அதிகாரிகள் 15 பேர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவினர் தாராசுரம் பேரூராட்சி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது குடிநீரை கூடுதலாக உறிஞ்சுவதற்காக குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட 62 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

துண்டிப்பு

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- தாராசுரம் பேரூராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் சீராக கிடைப்பதற்கு ஏதுவாக குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் விதிகளை மீறுபவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 

மேலும் செய்திகள்