தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

Update: 2017-04-21 23:00 GMT

ஆண்டிப்பட்டி,

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 180 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோல தேனி மாவட்டத்தில் செயல்படும் 32 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 89 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவக்கல்வியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘நீட்’ தேர்வுகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும், தமிழக அரசின் மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வியில் ஒதுக்கீட்டை பாதுகாத்திட அவசர சட்டம் கொண்டு வரவேண்டும்.

நோயாளிகள் அவதி

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும், இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் பெரும் அவதியுற்றனர். அவசர சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு மட்டும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதர சிகிச்சைகள் பெற வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அவரச சிகிச்சை அளிப்பதையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்