கடலூர் முதுநகர் அருகே கழுத்தை நெரித்து பெண் படுகொலை: நகை–பணம் கொள்ளை

கடலூர் முதுநகர் அருகே கழுத்தை நெரித்து பெண் படுகொலை நகை–பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு

Update: 2017-04-21 23:15 GMT

கடலூர் முதுநகர்

கடலூர் முதுநகர் அருகே கழுத்தை நெரித்து பெண்ணை படுகொலை செய்து, நகை–பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மமனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

வீட்டில் தனியாக இருந்தார்

கடலூர் முதுநகர் அருகே உள்ள நொச்சிக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி ராஜலட்சுமி(வயது 75). இவர்களுக்கு கலியபெருமாள்(55) என்ற மகனும், ஜெயம், காமாட்சி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

இவர்கள் 3 பேரும் திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராமசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் ராஜலட்சுமி அவரது வீட்டின் முன்பு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது வீட்டு வாசல் முன்பு மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், ராஜலட்சுமியின் மகன் மற்றும் மகள்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி கடலூர் துறைமுக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தடயங்கள் சேகரிப்பு

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வேதரத்தினம், மதிவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மூதாட்டியின் உடலை பார்த்து விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர்.

விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. ராஜலட்சுமியின் வீடு மற்றும் அவரது உடலை மோப்பமிட்ட நாய், அங்கிருந்து அருகில் உள்ள முந்திரித்தோப்புக்குள் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.

கழுத்தை நெரித்து கொலை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்ததை மர்மமனிதர்கள் நோட்டமிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மமனிதர்கள், ராஜலட்சுமியை தாக்கி நகைகளை பறிக்க முயன்றுள்ளனர்.

இதை சற்றும் எதிர்பாராத ராஜலட்சுமி, அவர்களிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார். ராஜலட்சுமியை வெளியே விட்டால், அனைவரையும் காட்டிக்கொடுத்துவிடுவார் என்று அச்சமடைந்த மர்மமனிதர்கள், ராஜலட்சுமியின் கை, கால்களை கட்டிப்போட்டனர்.

அப்போது ராஜலட்சுமி சத்தம்போட்டதால், அவரது வாயை பொத்தி கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். பின்னர் ராஜலட்சுமி அணிந்திருந்த செயின், மோதிரம், தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு, வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்தும் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

பரபரப்பு

இதுகுறித்து கலியபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்து விட்டு நகை, பணத்தை மர்மமனிதர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தடயங்களை அழிக்க மிளகாய் பொடி தூவிய மர்மமனிதர்கள்

கொலை செய்யப்பட்டு கிடந்த ராஜலட்சுமியின் உடலை சுற்றிலும் மற்றும் அவரது வீட்டிற்குள்ளும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. ராஜலட்சுமியின் கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த மர்மமனிதர்கள், தடயங்களை அழிக்கவும், மோப்பநாய் மோப்பமிடாமல் இருக்கவும் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றிருப்பதாக போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்