ஊத்தங்கரை அருகே கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

ஊத்தங்கரை அருகே கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

Update: 2017-04-19 22:31 GMT

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அண்ணாநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவுரம்மாள் என்கிற கவுரி (22). இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த சிவக்குமார் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

ஊத்தங்கரை அருகே உள்ள சாலைகொக்காரபட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (24). இவர் சீட்டு பணம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜெயபிரகாஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே ஜெயபிரகாஷ் உயிரிழந்தார். இது குறித்து கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மேலும் செய்திகள்