கிருஷ்ணகிரியில் 2 டன் செம்மரக்கட்டைகள் கடத்திய 4 பேர் கைது டிப்பர் லாரி – கார் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் வாகன தணிக்கையின் போது 2 டன் செம்மரக்கட்டைகள் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2017-04-19 22:29 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி தலைமையிலான போலீசாரும், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் நாகேஷ் தலைமையிலான வனத்துறையினரும் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் சுமார் 2 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது டிப்பர் லாரியை பின்தொடர்ந்து வந்த காரையும் நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அதில் டிப்பர் லாரியில் ஆந்திர மாநிலம் திருப்பதி காட்டுப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு செல்ல இருந்ததும், அந்த டிப்பர் லாரியை பின்தொடர்ந்து காரில் வந்தவர்களும், செம்மரக்கட்டை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து செம்மரக்கட்டைகள் கடத்த பயன்படுத்திய டிப்பர் லாரி, கார் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவரான கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 32), செல்வகுமார்(29), கார் டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வேடசந்திரபாளையத்தை சேர்ந்த குணசேகரன்(31), மூர்த்தி(27) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்