ஊத்தங்கரை அருகே கார் – மோட்டார்சைக்கிள் மோதி பெண் உள்பட 2 பேர் சாவு

ஊத்தங்கரை அருகே கார் – மோட்டார்சைக்கிள் மோதி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2017-04-19 22:24 GMT

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள படதாசம்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 45). இவர் தேன்கனிக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று சின்னதம்பி மோட்டார்சைக்கிளில் சிங்காரபேட்டைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது படதாசம்பட்டி அருகே வந்தபோது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் எதிரே காரில் வந்துகொண்டிருந்தார். அவருடைய தாய் ராதா (55) காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்தார். அந்த நேரம் எதிர்பாராதவிதமாக சின்னதம்பியின் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி, அருகே இருந்த மரத்தில் வேகமாக மோதி நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த சின்னதம்பி, ராதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மாரியப்பன் பலத்த காயம் அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மாரியப்பனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்து குறித்து அறிந்த கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் விபத்தில் இறந்த சின்னதம்பி, ராதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்