நிரந்தர சேர்க்கை மையங்களில் தர்மபுரி–ஆதார் விவரங்களை திருத்தம் செய்யும் வசதி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதார் விவரங்களை திருத்தம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2017-04-19 21:53 GMT

தர்மபுரி,

இதன் மூலம் பொதுமக்கள் பயன்பெறலாம் என கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருத்தம் செய்யும் வசதி

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் கைரேகை அல்லது கருவிழியினை பதிவு செய்து தங்கள் பெயர், பிறந்ததேதி, பாலினம், முகவரி, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஆதார் அட்டையில் புகைப்படம், கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்து கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும். ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக்கொள்வதற்கு ரூ.10 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஒப்புகை சீட்டு

நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. பொதுமக்கள் தவறாமல் ஒப்புகை சீட்டை ஆதார் மையத்தில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளரிடமிருந்து கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆதார்சேவை தொடர்பாக குறைகள், புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911– ஐ தொடர்பு கொள்ளலாம். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு 1077 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்