சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
ஒகேனக்கல் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள பண்ணப்பட்டியை சேர்ந்தவர் சிவன்(வயது 27), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சிவனுடைய மனைவிக்கு தங்கை உறவுமுறை கொண்ட 14 வயது சிறுமி, சிவன் வீட்டில் கடந்த 2016–ம் ஆண்டு தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அந்த சிறுமியை சிவன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாவாயி மற்றும் போலீசார், சிவன் மீது சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்(போக்சோ) வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
10 ஆண்டு சிறைஇந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் முடிவில் சிவன் மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சிவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1500 அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி மீராசுமதி நேற்று தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை சிவன் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.