விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

Update: 2017-04-19 22:15 GMT
செம்பட்டு,

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பக்ருதீன் என்ற பயணி உடலில் மறைத்து 75 கிராம் தங்க கட்டிகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் ஆகும். இதேபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சேலத்தை சேர்ந்த பயணி ராஜதுரை, சிவகங்கையை சேர்ந்த பயணி பாண்டிராஜ் ஆகியோர் உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 160 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடத்தல் தங்கத்தை வாங்குவதற்காக விமான நிலையத்தின் வெளியே ஒருவர் நிற்பதையும் சுங்கத்துறை அதிகாரிகள் அறிந்தனர். அவரது புகைப்படத்தை சிங்கப்பூரில் இருந்து வாட்ஸ் அப் மூலம் பெற்றனர். அதன்பின்னர் அந்த புகைப்படத்தை வைத்து விமானநிலையத்தின் வெளியே நின்ற புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டியன் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். தங்கம் கடத்தி வந்த நபர்களிடமும், தங்கத்தை வாங்க வந்த நபரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சம்பவங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு மொத்தம் ரூ.7 லட்சத்து 12 ஆயிரம் ஆகும். 

மேலும் செய்திகள்