ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ரெயில்வே ஊழியர் போலீசார் விசாரணை

சென்னை-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ரெயில்வே ஊழியர் போலீசார் விசாரணை

Update: 2017-04-19 22:15 GMT
திருச்சி,

சென்னையில் இருந்து நேற்று பகலில் திருச்சிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. ரெயிலில் பி.1 முதல் பி.4 குளிர்சாதன வசதி பெட்டிகளில் சென்னையை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் சுரேஷ் பணியில் இருந்தார். ரெயில் விழுப்புரத்தை தாண்டி வந்தபோது பி.4 பெட்டியில் குளிர்சாதன எந்திரம் (ஏ.சி.) பழுது ஏற்பட்டது. இது குறித்து பயணிகள் புகாரின்பேரில், அதனை சரி செய்யுமாறு அந்த பெட்டியில் உதவியாளராக பணியில் இருந்த முகமதுஹவுஸ் என்பவரிடம் டிக்கெட் பரிசோதகர் தெரிவித்தார். ஆனால் அவர் பழுதை சரிசெய்யவில்லை. இதையடுத்து ரெயில் கடலூரை தாண்டி வந்தபோது முகமதுஹவுசிடம் டிக்கெட் பரிசோதகர் சுரேஷ் மீண்டும் கூறி பழுதை சரி செய்ய அறிவுறுத்தினார். அப்போது அவர் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் டிக்கெட் பரிசோதகர் சுரேஷை, முகமது ஹவுஸ் தாக்கினார். இதில் அவர் காயமடைந்தார். ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை ரெயில்வே ஊழியர் தாக்கிய சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ரெயில் மயிலாடுதுறை ரெயில் நிலையம் வந்தது. அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின் டிக்கெட் பரிசோதகர் சுரேஷ் அதே ரெயிலில் திருச்சி வந்து இறங்கினார். இந்த சம்பவம் குறித்து திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சுரேஷ் புகார் தெரிவித்தார். இதையடுத்து சம்பவம் நடந்த இடம் சிதம்பரம் ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் புகார் மனுவை சிதம்பரம் ரெயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். புகார் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்