குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

புள்ளம்பாடியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2017-04-19 22:45 GMT
கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 1-வது வார்டில் தைலாகுளம் மற்றும் காமராஜர் நகர் பகுதியில் சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு அண்ணாநகர் பகுதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஆழ்குழாய் கிணற்றுடன் பொருத்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து உப்புநீர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் 60 நாட்களுக்கு முன்பு பேரூராட்சி அலுவலகம் சென்று முறையிட்டு எங்களுக்கு நல்ல குடிநீர் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

காலிக்குடங்களுடன் சாலை மறியல்

பொது மக்களின் கோரிக்கை மீது பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காலை 9.30மணியளவில் புள்ளம்பாடி தைலாகுளம் பகுதியில் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் திரளாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலை மறியல் காலை நேரத்தில் நடைபெற்றதால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து பாதிப்பால் பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்கி சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என கூறியதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்