வங்கி கடன் பெற போலி ஆவணம் தாக்கல்: ஆயுதப்படை போலீஸ்காரர் பணிஇடைநீக்கம்
வங்கி கடன் பெறுவதற்காக போலி ஆவணம் தாக்கல் செய்த ஆயுதப்படை போலீஸ்காரர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசப்பெருமாள். காரைக்காலை சேர்ந்தவர். இவர் புதுவையில் உள்ள ஒரு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதற்காக தனது சம்பள ஆவண சான்றிதழை சமர்ப்பித்து இருந்தார். இதன் உண்மைத் தன்மையை அறிய வங்கியில் இருந்து ஆயுதப்படை அலுவலகத்துக்கு அந்த சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு இந்த சான்றிதழை ஆய்வு செய்த போது ஆயுதப்படை அதிகாரி (கமாண்டன்ட்) மகேஷ்குமார் பர்னாவால் என்பவரின் கையெழுத்தை போலியாக போட்டு முத்திரை பதித்து போலியாக தயாரித்து மோசடி செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பணி இடைநீக்கம்இதுகுறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசப்பெருமாளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் அவர் மீது காவல்துறை தலைமையக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது வெங்கடேசப்பெருமாளை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.