மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலால் வீடுகளில் முடங்கிய மக்கள்

மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலால் வீடுகளில் முடங்கிய மக்கள் வீதிகள் வெறிச்சோடின

Update: 2017-04-19 22:30 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் முழுவதும் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிப்போயினர். மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய வீதிகள் வெறிச்சோடின.

சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் நடந்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கிப்போய் உள்ளனர். சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதேபோல் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிக்கையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதுடன், அனல் காற்று வீசும் என்றும் கூறப்பட்டது. அதன்படி நேற்று 10–க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியதுடன், அனல் காற்று வீசியது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.

106 டிகிரி வெயில்

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மழை இல்லாததால் கோடை வெயில் உக்கிரம் காட்ட தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் அளவை தொட்டது. கடும் வெப்பத்துடன் அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டனர். காலை 8 மணிக்கெல்லாம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளி–கல்லூரி சென்ற மாணவ–மாணவிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

வெறிச்சோடிய வீதிகள்

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் போன்ற நகர் பகுதிகளில் வாட்டி வதைக்கும் வெயிலால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

கொளுத்தும் வெயிலை சமாளிக்க பொதுமக்கள், கோடைக்காலத்தில் மதிய வேளையில் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும், இளநீர், பதனீர், பழங்கள் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்