எஸ்.புதூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மக்கள் போராட்டம்

எஸ்.புதூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி பொதுமக்கள் சாலையோரத்தில் காலிக்குடங்களுடன் அறப் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-04-19 22:45 GMT

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியமும் ஒன்று. இந்த ஒன்றியத்தில் கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் தண்ணீருக்காக தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் எஸ்.புதூர் கிராமத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அறப் போராட்டம் நடத்தினர். முன்னதாக எஸ்.புதூர் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும் குடிநீர் சேமிப்பு தொட்டியில் இருந்து வரும் நீரை முறையாக பொதுமக்களுக்கு சென்றடைய வழி வகுக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டது.

போராட்டம்

ஆனால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எஸ்.புதூர் பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் சாலையோரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் கந்தசாமி மற்றும் எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முதல் நடவடிக்கையாக சாலையோரங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி உடனடியாக தொடங்கியது.

இதுகுறித்து எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் கூறும்போது, எஸ்.புதூர் கிராமமக்களின் கோரிக்கை மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, இன்னும் 2 நாட்களில் அனைத்து தெருக்களிலும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் நிறுவப்பட்டு விடும். இதன்மூலம் பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாடு போக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்