ஆலங்குளத்தில் கல்லால் தாக்கி லாரி டிரைவரை கொலை செய்தது ஏன்? கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

நண்பரை அடித்த முன்விரோதத்தில், லாரி டிரைவரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக, இவ் வழக்கில் கைதான தொழிலாளி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2017-04-19 20:00 GMT
ஆலங்குளம்,

நண்பரை அடித்த முன்விரோதத்தில், லாரி டிரைவரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக, இவ் வழக்கில் கைதான தொழிலாளி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

லாரி டிரைவர் கொலை

ஆலங்குளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் கார்த்திகேயன். லாரி டிரைவர். இதே ஊரை சேர்ந்த நடராசன் மகன் மகாராஜா என்பவரை, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயன் தாக்கியதில் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயனை மகாராஜா, அவருடைய நண்பர்களான ஆலங்களும் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகநாடார் மகன் கார்த்திக் ராஜா, பாண்டி தங்கராஜ் மகன் பாக்கியராஜா ஆகியோர் சேர்ந்து கல்லால் தாக்கி கொலை செய்தனர்.

2 பேர் கைது

இக்கொலை சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து மகாராஜா, பாக்கியராஜா ஆகிய 2பேரை கைது செய்தார். இதில் பாக்கியராஜா போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:– நான் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறேன். நானும், மகாராஜா மற்றும் கார்த்திக்ராஜா ஆகியோர் நண்பர்கள். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகாராஜாவை கார்த்திகேயன் அடித்ததாக கூறி வருத்தப்பட்டார். இதனால், கார்த்திகேயன் மீது எங்களுக்கு முன்விரோதம் இருந்து வந்தது. அவரை தாக்குவதற்கு காத்திருந்தோம்.

கல்லால் தாக்கி கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகாராஜா வீட்டில் இருந்தார். அவருடைய வீடு அருகிலுள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகேயுள்ள மறைவிடத்தில் நானும், கார்த்திக்ராஜாவும் மது அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது மகாராஜா வீடு முன்பு கார்த்திகேயன் நடந்து சென்று கொண்டிருந்தார். ஆத்திரத்தில் இருந்த நானும், கார்த்திக்ராஜாவும் கார்த்திகேயனை வழிமறித்து அடித்து உதைத்தோம். அப்போது மகாராஜா ஓடிவந்து அடிக்க வேண்டாம் என தடுக்க முயற்சித்தார். ஆனால், கார்த்திகேயன் மீறிக் கொண்டு எங்களை தாக்க முயற்சித்தார். இதனால், அவரை 3பேரும் சேர்ந்து தாக்கினோம். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள், எங்களை கண்டித்தனர்.

இதை தொடர்ந்து கார்த்திகேயனை வலுகட்டாயமாக பத்திரகாளியம்மன் கோவில் அருகில் இருள் சூழ்ந்த பகுதிக்கு இழுத்து சென்று கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு 3 பேரும் தப்பி ஓடினோம். போலீசார் என்னையும், மகாராஜாவையும் பிடித்து விட்டனர், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அந்த 2 பேரும் ஆலங்குளம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கார்த்திக்ராஜாவை ஆலங்குளம் போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்