நாகர்கோவிலில் சாலையில் வேரோடு சாய்ந்த மரம் 2¼ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவிலில் சாலையில் வேரோடு சாய்ந்த மரத்தால் 2¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2017-04-18 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து ராமன்புதூர் செல்லும் சாலையும் ஒன்றாகும். இந்த சாலை வழியாக கோணம், தம்மத்துக்கோணம், ராஜாக்கமங்கலம், மண்டைக்காடு, குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம். இதனால் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று மதியம் 1.45 மணி அளவில் செட்டிகுளத்தில் இருந்து ராமன்புதூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நின்ற மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

போக்குவரத்து பாதிப்பு


இதனால் அந்த சாலையில் பஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாதபடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரோட்டில் வேரோடு சாய்ந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி அந்த மரத்தை தீயணைப்பு படையினர் வெட்டி, அகற்றினர். போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை சற்குணவீதி வழியாக மாற்றி விட்டனர்.

மரம் முழுமையாக அகற்றப்பட்ட பின்னர், அதாவது மாலை 4 மணிக்குப்பிறகு அந்த சாலையில் வழக்கம்போல் போக்குவரத்து தொடங்கியது. இந்த சம்பவத்தால் 2¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்