டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி அரசர்குளம் பகுதிகளில் சாலை மறியல்

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நாகுடி, அரசர்குளம் பகுதிகளில் சாலை மறியல்

Update: 2017-04-18 22:30 GMT
அறந்தாங்கி,

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நாகுடியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த கடையை நாகுடிக்கு அருகில் உள்ள கலக்குடி மானவன்னூர் கிராமத்தில் அமைக்க தீவிர ஏற்பாடு நடந்து வந்தது. இந்த நிலையில் அங்கு டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நாகுடியில் அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோன்று அரசர்குளம் கீழ்பாதி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் அரசர்குளம் கடைவீதி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

மேலும் செய்திகள்