பாபநாசத்தில் விவசாயியிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் திருட்டு

பாபநாசத்தில் விவசாயியிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2017-04-18 22:15 GMT
பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தெற்கு தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருடைய மகன் சுதாகரன் (வயது47). விவசாயியான இவர் பாபநாசத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை அடைப்பதற்காக நேற்று ஒரு பையில் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றார். அப்போது வங்கியில் மேலாளர் இல்லை என தெரிகிறது. இதனால் அவர் தனது மோட்டார்சைக்கிளில் பாபநாசம் மெயின் சாலைக்கு வந்து, ஒரு கடையில் குளிர்பானம் குடித்து விட்டு மீண்டும் வங்கிக்கு புறப்பட்டு சென்றார்.

திருட்டு

பாபநாசம் சீனிவாசபெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அந்த மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர், பணம் கீழே கொட்டி கிடப்பதாக சுதாகரனிடம் கூறினார். இதை நம்பிய அவர் மோட்டார்சைக்கிளை உடனடியாக நிறுத்தி கீழே இறங்கி பார்த்தார். அப்போது அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை அவர் எடுக்க முயன்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர், சுதாகரனின் மோட்டார்சைக்கிளில் பெட்ரோல் டேங்க் மீது வைக்கப்பட்டிருந்த பண பையை திருடிக் கொண்டு தப்பி சென்றார். அந்த பையில் வங்கி கணக்கு புத்தகம், கிராம நிர்வாக அதிகாரி அளித்த சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களும் இருந்தன.

வலைவீச்சு

இதுகுறித்து சுதாகரன் பாபநாசம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கீழே பணம் கிடப்பதாக கூறிய மர்ம நபர், நூதன முறையில் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்