டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்
அறச்சலூர் மற்றும் வடபழனி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
அறச்சலூர் மற்றும் வடபழனி பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அங்கு கலெக்டர் இல்லாததால் அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மேனகாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
அறச்சலூர் மற்றும் வடபழனி கிராமத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அறச்சலூர் மற்றும் வடுகபட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
தடைவிதிக்க வேண்டும்மூடப்பட்ட இந்த 2 டாஸ்மாக் கடைகளை தற்போது அறச்சலூர் அருகே உள்ள நாகமலை அடிவாரத்தின் எதிரிலும், வடபழனி வாரச்சந்தைக்கு தென்புறமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகமலை அடிவாரத்தில் பிரசித்திபெற்ற தீர்த்தகுமாரசாமி கோவிலும், வடபழனியில் பிரசித்திபெற்ற முருகன் கோவிலும் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். மேலும் மாணவ –மாணவிகளும் இந்த வழியாகத்தான் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள்.
எனவே மேற்கண்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைத்தால் மாணவ –மாணவிகள், பெண்கள் அந்த வழியாக நடந்து செல்ல அச்சப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே அறச்சலூர் மற்றும் வடபழனி பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.