பெற்ற கல்வியை சமூக வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்

‘பெற்ற கல்வியை சமூக வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்’ என்று ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.நர்மதாதேவி கூறினார்.

Update: 2017-04-18 23:00 GMT

ஈரோடு

‘தினத்தந்தி’ –குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் ஈரோட்டில் நடத்திய ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சியில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ஆர்.நர்மதாதேவி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

கல்வியின் நோக்கம் என்ன? நாம் படிப்பதற்கான நோக்கம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள, ஒரு வேலை பெறுவதற்காக என்று பல காரணங்கள் இருந்தாலும், கல்வி என்பது நம் உள்ளே இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருவதாக இருக்க வேண்டும். நமது ஆற்றல் நாம் பெற்ற கல்வியால் வெளிக்கொண்டு வரப்படுமானால் அது வெற்றி. மாணவ–மாணவிகள் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஒரு ஆசிரியராக, பேராசிரியராக, ஒரு எழுத்தாளராக என்று எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதில் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

வெற்றியை அணுகுதல்

முன்பு ஒருவர் எழுத்தாளராக இருந்தார் என்றால், அவரைப்பற்றி வேடிக்கையாக பேசும்போது, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார்? என்று கேட்பார்கள். அத்தகைய ஏழ்மை நிலை இருந்தது. அதே எழுத்தாளர் சமூகத்தில்தான் ஜெ.கே.ரவுலிங் என்ற எழுத்தாளர் ஹாரி பார்ட்டர் நாவலை எழுதி மிகப்பெரும் பணக்காரர் ஆனார். எனவே வெற்றியை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதும் முக்கியமாகும். நமது வெற்றியை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஒரு ஊரில் மிகப்பெரிய வர்த்தகர் ஒருவர் இருந்தார். வெற்றிகரமான அவரது தொழிலில் திடீர் என்று நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை அவரால் ஈடுசெய்ய முடியவில்லை. வீழ்ந்துபோன அவரது தொழிலில் இருந்து எழுந்து வர முடியவில்லை. மனம் உடைந்த அவர், தொழிலில் பெரும் பின்னடைவை சந்தித்தார். இந்த தோல்விக்கான காரணம் என்ன என்பதை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஒருநாள் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு பூங்காவில் உட்கார்ந்து இருந்தார். அவரைப்பார்த்தாலே அவர் பெரும் சிக்கலில் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். அப்போது அவர் இருந்த இடத்தின் நேர் எதிர் திசையில் இருந்து ஒரு நேர்த்தியான ஆடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். அவர் இவரைப்பார்த்து உங்களைப்பார்த்தால் ஏதோ பிரச்சினையில் இருப்பதுபோன்று உள்ளது. உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்? என்று கேட்டார்.

அவர் பரிவாக கேட்டதும், இவரும் தனது பிரச்சினையை கூறினார். சரி உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றதும், இவரும் ரூ.50 கோடி வேண்டும் என்றார். இவர் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்த நபர் தன்னிடம் இருந்த காசோலையில் ரூ.50 கோடியை எழுதி கையொப்பத்தை போட்டு கொடுத்துவிட்டு, நீங்கள் அடுத்த ஆண்டு இதே நாள் இதே நேரம் நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

இதை இவரால் நம்ப முடியவில்லை. கஷ்டம் அனைத்தும் ஒரே நாளில் தீரப்போகிறது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் காசோலையை பார்க்கிறார். அதில் ராக் பெல்லர் என்று கையொப்பமிடப்பட்டு உள்ளது. அவர் மிகப்பெரிய கோடீஸ்வரர். அதைப்பார்த்ததும் இவருக்கு இரட்டிப்பு சந்தோ‌ஷம்.

எனது தொழிலுக்கு மிகப்பெரிய மனிதரான ராக்பெல்லரின் உதவி இருக்கிறது என்பதை நினைத்தே மன உறுதியுடன் தனது வேலையை செய்தார். அதுவரை நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபகரமாக மாறத்தொடங்கியது. மீண்டும் கோடிகள் வரத்தொடங்கியது. இதனால் அந்த காசோலையை அவர் வங்கியில் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

நேர்மறை சிந்தனை

ஒரு ஆண்டு முடிந்தது. குறிப்பிட்ட நாள் வந்தது. ராக்பெல்லர் கொடுத்த காசோலையுடன் குறிப்பிட்ட பூங்காவில் அதே இடத்தில் உட்கார்ந்து இருக்கிறார். அதே மனிதர் எதிர்திசையில் இருந்து வருகிறார். மகிழ்ச்சியுடன் அவரை எதிர்கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக 2 செவிலியர்கள் அந்த மனிதரை பிடித்து இழுத்துச்செல்கிறார்கள். இவருக்கு ஆச்சரியம், அத்துடன் கோபம், விரைந்து சென்று அவர்களை தடுத்து, அவர் யார்? என்று தெரியுமா? அவரை ஏன் இழுத்துச்செல்கிறீர்கள்? என்று கேட்கிறார். அப்போது அந்த செவிலியர்கள், ‘இவரைப்பற்றி உங்களுக்கு தெரியாது. கடந்த 2 ஆண்டுகளாக, எங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து அடிக்கடி தப்பி வந்து நான்தான் ராக் பெல்லர் என்று கூறி வருகிறார். இவர் ஒரு மனநோயாளி’ என்று கூறினார்கள்.

அதை கேட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்தார். இங்கே அவர் ஒரு காசோலையை வைத்துக்கொண்டு, அதை கொடுத்தவர் மிகப்பெரிய மனிதர் என்ற நினைவில் தானாக உழைத்து தனது வீழ்ச்சியில் இருந்து எழுந்து வந்தார். அப்படி என்றால் அவரை உயர்த்தியது அவருடைய நேர்மறையான சிந்தனை.

சரித்திரத்தில் இடம்

தன்னம்பிக்கை, தைரியம் இருந்தால் எதுவும் முடியும். முடியாது என்பது முட்டாளின் அகராதி என்கிறார் நெப்போலியன். டென்சிங் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்வரை யாரும் அங்கு செல்லவில்லை. ஆனால் அவர் ஏறி, இது முடியும் என்று செய்து காட்டியபிறகு ஆயிரக்கணக்கானவர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட்டார்கள்.

எனவே எதையும் முடியும் என்று செய்து காட்ட யாராவது தேவைப்படுகிறார்கள். நிலவில் கால் வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங்க். ஆனால் அவருடன் ஆல்ரின், காலின்ஸ் ஆகிய 2 பேரும் உடன் சென்றனர். நிலவில் கால்வைக்கும் அந்த கடைசி நொடியில் மற்றவர்கள் யோசித்த நேரம், ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தார். அதனால் அவர் சரித்திரத்தில் இடம் பிடித்தார்.

சமூகத்தின் வளர்ச்சி

இதயத்தில் இருக்கும் ரத்தம் உடல் முழுவதும் பாய்ந்தால்தான் உடல் சமநிலை அடைந்து உயிர்கள் பாதிப்பின்றி வாழ முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட எந்த பணியாக இருந்தாலும் இந்த சமூகத்துக்கு பயன் உள்ள பணியாக மாற்ற வேண்டும். சேவை என்பது சமூகத்துக்கு முழுவதுமாக இருக்க வேண்டும்.

இதைத்தான் பாரதியும் தனது காணி நிலம் வேண்டும் பாடலில், என் பாட்டு திறத்தால் இந்த வையத்தை பாலிக்க வேண்டும் என்கிறார். அவருடைய சமூக அக்கறைதான் இன்றும் பாரதியை நாம் நினைக்கச்செய்கிறது. எனவே நாம் பெற்ற கல்வியை இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். வெற்றி பெற, நேர்மறையான சிந்தனையும், கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்.

இவ்வாறு ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ஆர்.நர்மதாதேவி கூறினார்.

மேலும் செய்திகள்