போரூர் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் சாவு சாவில் மர்மம்

போரூர் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார். தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2017-04-18 23:30 GMT

பூந்தமல்லி,

சென்னை கே.கே.நகர், அய்யாவு நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 36). இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சாரதா என்ற புவனேஸ்வரி (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுப்பிரமணி, குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இதனால் அவரது மனைவி சாரதா, கணவரை போரூரை அடுத்த மவுலிவாக்கம், லில்லி தெருவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்கனவே சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சுப்பிரமணி மீண்டும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.

சாவில் மர்மம் இருப்பதாக புகார்

இதைத்தொடர்ந்து, சாரதா மீண்டும் தனது கணவரை அதே போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 14–ந் தேதி சேர்த்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணி கழிவறையில் தவறி விழுந்து பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாக, சாரதாவுக்கும், மாங்காடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், தனது கணவர் உடலில் உள் காயங்கள் இருப்பதாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் மாங்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் ரவி உள்பட 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஊழியர்கள் தாக்கினார்களா?

இதுகுறித்து போலீசார் கூறுகையில்:–

கடந்த ஆண்டு இந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நொளம்பூரை சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். அவரை போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் கடுமையாக தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்த மையத்தின் உரிமம் காலாவதியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் சுப்பிரமணியும் அங்குள்ளவர்கள் கடுமையாக தாக்கியதில் உயிர் இழந்தாரா? அல்லது கழிவறையில் தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்