புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

Update: 2017-04-18 23:00 GMT

தாம்பரம்,

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 80–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மதியம் சானடோரியத்தில் உள்ள தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது தொடர்பாக தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரனிடம் பேசி புதிதாக டாஸ்மாக் கடையை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

மேலும், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியரும் உறுதியளித்தார். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்