அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் மூலம் 134 வீடுகள் கட்டப்படுகிறது
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் மூலம் 134 வீடுகள் கட்டப்படுகிறது. இதை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி,
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வீடு கட்டிக் கொள்ள தகுதியுள்ளவர்கள் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் வீடு இல்லாதவராக இருக்க வேண்டும். வீட்டு பத்திரம் அல்லது பட்டா, வீடு கட்டும் நபரின் பெயரில் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட மத்திய அரசு மானியமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், மாநில அரசு ரூ.60 ஆயிரம் சேர்த்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ் வரன்பட்டியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 134 பேருக்கு வீடு கட்டுவதற்கு ரூ.2 கோடியே 81 லட்சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
விண்ணப்பங்கள் பரிசீலனைதற்போது வீடு கட்டும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கட்டிட பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது அ.தி.மு.க. பிரமுகர்கள் நரிமுருகன், பி.ஆர்.பாண்டியன், சிராஜ்தீன் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சூளேஸ்வரன்பட்டியில் முதலில் விண்ணப்பம் கொடுத்த 134 பேருக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 29 பேர் வீடு கட்ட விண்ணப்பம் கொடுத்து உள்ளனர். அந்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. கூடுதலாக விண்ணப்பங்கள் வந்ததும், அவற்றை பரிசீலனை செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.