பரம்பிக்குளத்தில் தடியடி சம்பவம்: 42 பேர் மீதான வழக்கை வாபஸ் பெற சம்மதம்
பரம்பிக்குளத்தில் தடியடி நடந்த சம்பவம் தொடர்பாக 42 பேர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற கேரள–தமிழக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.;
பொள்ளாச்சி
பரம்பிக்குளத்தில் இருந்து தினமும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாகனத்தில் பள்ளி மாணவ –மாணவிகள் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் பகுதியில் உள்ள பள்ளிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்த வாகனத்தை கேரள வனத்துறையினர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தியதை கண் டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12–ந்தேதி பரம்பிக்குளத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கேரள போலீசார் அழைத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது கேரள போலீசார் தடியடி நடத்தியதில் 55 பேர் காயமடைந்தனர்.
வழக்குபதிவுஇது குறித்து கேரள வனத்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் தமிழக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தியாகராஜன், பஸ் டிரைவர், தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 42 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்த போது,, கேரள வனத்துறையினர் வழக்குபதிவு செய்ததை மறைத்து விட்டனர்.
இதனால் வழக்குபதிவு செய்து 6 மாதம் காலம் கழித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப் பப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அமைதி பேச்சுவார்த்தைஇந்த நிலையில் பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் தமிழக –கேரள மாநில அதிகாரிகள் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதற்கு சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தாசில்தார் செல்வி, சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சியாமளா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் லோகநாதன், உதவி செயற்பொறியாளர் கருணாகரன், உதவி பொறியாளர்கள் தியாகராஜன், குமார், ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அதிகாரி சுப்பையா, டாப்சிலிப் வனச்சரகர் கிருஷ்ணசாமி, வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன், பரம்பிக்குளம் வன அதிகாரி அஞ்சன்குமார், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முகமது காசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அனுமதி வாங்க வேண்டும்கூட்டத்தில் பரம்பிக்குளம் உதவி பொறியாளர் உள்பட 42 பேர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தினார். அதற்கு கேரள போலீசார் மாவட்ட வன அதிகாரி அஞ்சன் குமார் புகார் கொடுத்து உள்ளார். அவர் கூறினால் வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
அதற்கு வனத்துறை அதிகாரி அஞ்சன்குமார் கூறுகையில், பரம்பிக்குளத்திற்கு பொதுப்பணித்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் தவிர மற்றவர்களும் வருகின்றனர். பரம்பிக்குளத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டும் செல்லலாம். ஆனால் மற்ற அதிகாரிகள் யார்? வந்தாலும் கேரள வனத் துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றார்.
வழக்கை வாபஸ் பெற சம்மதம்அப்போது தமிழக அதிகாரிகள் பரம்பிக்குளத்திற்கு பஸ்சில் வந்தது பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான். அவர்கள் தங்களது அடையாள அட்டைகளை கூட பரம்பிக்குளம் போலீசாரிடம் காண்பித்தனர் என்றனர்.
உடனே அஞ்சன்குமார், வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக கடிதம் தருவதாக கூறினார். கூட்டத்தில் கேரள போலீசார் வழக்குபதிவு செய்துள்ளவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாது. அரசின் கவனத்திற்கு இதை கொண்டு சென்ற வழக்கை வாபஸ் பெறுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கூட்டம் முடிந்து வெளியே வந்ததும், கேரள வனத்துறையினர் மற்றும் தமிழக பொதுப்பணித் துறையினர் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி கொண்டனர்.
ஒற்றுமைகூட்டம் முடிந்து வெளியே வந்த பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முகமதுகாசிம் நிருபர்களிடம் கூறியதாவது:–
பரம்பிக்குளத்தில் பஸ்சை மறித்து போராட்டம் நடத்தியது தவறு. இதற்காக தான் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கை வாபஸ் பெற ஏற்பாடு செய்யப்படும். இதற்காக கேரள அரசிற்கு கடிதம் அனுப்பப்படும். அரசின் அனுமதி கிடைத்த பிறகு, வழக்கை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இருமாநில அதிகாரிகள் ஒற்றுமையுடன் செயல்பட கூட்டத்தில் உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.