வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் கவாத்து பணி தீவிரம்

வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் கவாத்து பணி தீவிரம் பாசிகளை அகற்ற சுண்ணாம்பு கரைசல் தெளிக்கப்படுகிறது

Update: 2017-04-18 22:00 GMT

வால்பாறை

வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் கவாத்து செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் செடிகளில் இருக்கும் பாசிகளை அகற்ற சுண்ணாம்பு கரைசல் தெளிக்கப்படுகிறது.

தேயிலை தோட்டங்கள்

வால்பாறை என்றாலே தேயிலை தோட்டங்கள் நிறைந்த பசுமையான பகுதி என்பது தான் நினைவுக்கு வரும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் தேயிலை செடிகளை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

தற்போது வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களில் மகசூலை அதிகரிக்கவும், கோடை காலத் தில் நோய் தாக்குதலில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்கவும் கவாத்து செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து தேயிலை எஸ்டேட் நிர்வாகத்தினர் கூறியதாவது:–

நோய் தாக்கம்

தேயிலை செடிகள் மரமாக வளரும் தன்மை கொண்டது. ஆனால் தேயிலை செடி குறிப்பிட்ட அளவுக்கு இருந்தால் தான் தரமான தேயிலை பறிக்க முடியும். இதற்காகவே தேயிலை செடிகள் கவாத்து செய்யப்படுகிறது. எந்த செடியானாலும் குறிப்பிட்ட காலத்தில் பூ பூத்து காய் காய்க்க தொடங்கும். எனவே தேயிலை செடிகளை வளர விட்டால் அதில் உள்ள மாவுச்சத்துகள் பூவுக்கும், காய்க்கும் சென்று விடும். இதன் காரணமாக தரமான கொழுந்து தேயிலை வளர்வது தடைபட்டு மகசூல் பாதிக்கப்படும்.

தேயிலை செடிகள் அதிக கிளைகளை கொண்டது. கோடை காலத்தில் தேயிலை செடிகளில் கிருமி, பூச்சிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். அவை தேயிலை செடிகளின் கிளைகளில் பதுங்கி கொண்டு கொழுந்து இலைகள் வளர்வதற்கு தடையாக இருக்கும். மேலும் தேயிலை செடிகளில் உள்ள கிளைகளில் பாசி படிந்து விடுகிறது. பாசிகள் தேயிலை செடி களுக்கு செல்லும் சத்துகளை உறிஞ்சி விடுகின்றன. இதனால் தேயிலை செடிகள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

கவாத்து தீவிரம்

மேலும் ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் காவத்து செய்வதால் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தேயிலை செடிகளில் புதிய சக்தி நிறைந்த கொழுந்து இலைகள் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்த கவாத்து பணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

அந்த வகையில் தற்போது வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் கவாத்து பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கவாத்து செய்யப்பட்ட தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் வளர்ந்து இருக்கும் பாசிகளை அகற்றுவதற்கு சுண்ணாம்பு கரைசல் தெளிக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வால்பாறை வட்டார பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் கவாத்து பணி நடைபெறுவதால் இனி வரும் காலங்களில் அதிக சக்தி நிறைந்த கொழுந்து இலைகள் உற்பத்தி அதிகமாகும். இதை கருத்தில் கொண்டே அனைத்து தேயிலை தோட்ட நிர்வாகங்களும் தேயிலை தோட்டங்களில் கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளன. தேயிலை கொழுந்து உற்பத்தி அதிகரிக்கும் போது தொழிலாளர்களுக்கும் போதிய அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்