விவசாயிகள் தற்கொலை விவகாரம்: ‘மராட்டிய அரசும் ஒரு நாள் மரணத்தை தழுவும்’ சிவசேனா கடும் எச்சரிக்கை

விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் இதே நிலை நீடித்தால், மராட்டிய அரசும் ஒரு நாள் சாதாரண மரணத்தை தழுவும் என்று கூட்டணி கட்சியான சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2017-04-18 22:30 GMT

மும்பை,

இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:–

‘மே முக்யமந்திரி போல்தாய்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் முதல்–மந்திரி அறிவித்த திட்டங்களின் அழுக்கு, கடந்த 25 ஆண்டுகாலமாக மாநிலத்தில் பறக்கிறது. முந்தைய காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசும் இதே கூற்றை வெளியிட்டபோது, அத்தருணத்தில் எதிர்க் கட்சியில் அங்கம் வகித்த தேவேந்திர பட்னாவிஸ், பயிர் கடன் தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தினார்.

பட்னாவிஸ் ஏற்கனவே வலியுறுத்தியதற்கு இணங்க, இப்போது பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

மரணத்தை தழுவும்

மராட்டியத்தில் ஒவ்வொரு நாளும் 5–10 விவசாயிகள் வரை தற்கொலை செய்கின்றனர். இந்த மாதத்தில் மட்டும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 100–யை கடந்துவிட்டது.

பிரதமர் மோடியின் ஆட்சியின்கீழ், நாட்டின் விவசாய நிலவரம் மிகவும் கடுமையாக இருக்கிறது. பட்னாவிஸ் முதலில் தன்னுடைய தொலைக்காட்சி அரட்டையை நிறுத்திவிட்டு, விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க தீர்க்கமான நடவடிக்கை எடுக்கட்டும்.

விவசாயிகள் ஒவ்வொரு நாளும் இறக்கிறார்கள். ஆனால், அரசோ இதனை சாதாரண மரணம் என்று கூறி, தூர்தர்‌ஷனில் பேச செல்கிறது. இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால், மராட்டிய அரசும் ஒரு நல்ல நாளில் சாதாரண மரணத்தை தழுவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்