கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்வது குறித்து கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் திக்விஜய்சிங் ஆலோசனை பெங்களூருவில் நடந்தது
கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்வது குறித்து கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் திக்விஜய்சிங் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திக்விஜய்சிங் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு வந்தார். அவர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முதல்–மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் மந்திரிசபையில் காலியாக உள்ள 2 இடங்களை நிரப்புவது, கட்சிக்கு புதிய தலைவரை நியமனம் செய்வது மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். கர்நாடக காங்கிரஸ் தலைவராக உள்ள பரமேஸ்வர் 6 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பதவியை வகித்து வருகிறார். மேலும் அவர் மந்திரி பதவியிலும் இருக்கிறார்.
தொகுதி பொறுப்பாளராக...இதனால் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. சித்தராமையா, கட்சி தலைவர் பதவியை வட கர்நாடகத்தில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்களில் நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் அல்லது மூத்த தலைவர் எஸ்.ஆர்.பட்டீல் ஆகியோரில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
ஒருவேளை தலைவர் பதவியை ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவருக்கு வழங்குவதாக இருந்தால் மைசூரு மண்டலத்தில் பிரபலமாக உள்ள பொதுப்பணித்துறை மந்திரி மகாதேவப்பாவுக்கு தலைவர் பதவியை வழங்குமாறும், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் நஞ்சன்கூடு தொகுதி பொறுப்பாளராக செயல்பட்டு அந்த தொகுதியில் அவர் வெற்றி தேடி தந்துள்ளார் என்றும் சித்தராமையா ஆலோசனை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருங்கிணைந்த தலைமையின் கீழ்...இந்த கூட்டத்தில், சித்தராமையா உள்ளிட்ட ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் தேர்தலை சந்திப்பது குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சியில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று திக்விஜய்சிங் அறிவுறுத்தினார்.