சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பயிற்சி முகாமில் கலெக்டர் சங்கர் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2017-04-18 23:15 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதன்காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இந்த நிலையில் பழங்குடியின இளைஞர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் முகாம் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சங்கர் தலைமை தாங்கி பேசியதாவது:–

நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 1990–ம் ஆண்டில் 14.4 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு மட்டும் 31 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 17 ஆண்டுகளில் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மடங்கையும் தாண்டி உள்ளது.

சேவை மனப்பான்மை

நீலகிரி மாவட்டத்தின் இயற்கையை பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலர் ஆங்காங்கே குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு சுற்றுலா வழிகாட்டி என்பவர் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நல்ல பேச்சு திறன் உள்ளவராகவும், நல்ல அணுகுமுறை உள்ளவராகவும், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், அவற்றின் வரலாறு குறித்தும் நன்கு தெரிந்திருக்கவும் வேண்டும். மேலும் சேவை மனப்பான்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும். இந்த முகாமில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு நன்நடத்தை கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் பேச்சுத்திறன், தகவல் திறன்மேம்பாடு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அண்ணா மேலாண்மை பயிற்சி இயக்குனர் வித்யாசாகர், சுற்றுலா அலுவலர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்