மந்திரி பரமேஸ்வருடன் ஜெர்மனி அதிகாரிகள் குழு சந்திப்பு போலீஸ் துறையில் இணைந்து செயல்பட முடிவு

மந்திரி பரமேஸ்வரை ஜெர்மனி அதிகாரிகள் குழு சந்தித்து பேசியது.

Update: 2017-04-18 22:15 GMT

பெங்களூரு,

போலீஸ் உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி அதிகாரிகள் குழு

கர்நாடக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கடந்த ஆண்டு ஜெர்மனி நாட்டில் உள்ள பவேரியன் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கர்நாடக அரசுக்கும், பவேரியன் மாநில அரசுக்கும் இடையே சில துறைகளில் இணைந்து செயல்பட ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி பவேரியன் மாநில அரசின் பொருளாதாரம், கட்டமைப்பு, போக்குவரத்து, சைபர் குற்றங்கள் தடுப்பு, பெண்களின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான குழு கர்நாடகம் வந்துள்ளது.

போலீஸ் மந்திரி பரமேஸ்வரை பெங்களூரு விகாச சவுதாவில் நேற்று ஹெர்வின் உபர் தலைமையிலான அந்த குழுவினர் நேரில் சந்தித்து பேசினர். சைபர் குற்றங்கள் தடுப்பு, போலீஸ் துறையில் அளிக்கப்படும் பயிற்சி, பெண்கள் பாதுகாப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர். கர்நாடகத்தில் போலீஸ் துறையின் செயல்பாடுகள் குறித்து அந்த குழுவினருக்கு மந்திரி பரமேஸ்வர் விரிவாக எடுத்துக் கூறினார். இந்த சந்திப்புக்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இணைந்து செயல்படுவது...

பவேரியன் மாநில அரசுடன் கர்நாடக அரசு வணிகம், சுற்றுலா, தொழில், தகவல் தொழில்நுட்பம், போலீஸ் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பது குறித்து ஒப்பந்தம் போட்டுள்ளது. பவேரியன் போலீசார் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளை பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பவேரியன் போலீஸ் மாதிரி கர்நாடக போலீஸ் துறையை மேலும் பலப்படுத்தவும், இதற்காக பவேரியன் போலீசார் மூலம் பயிற்சி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டு சைபர் குற்றங்களை தடுப்பது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விவகாரங்களில் இணைந்து செயல்படுவது என்று முடிவு எடுத்துள்ளோம்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

இந்த கூட்டத்தில் போலீஸ் துறையின் ஆலோசகர் கெம்பையா, மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா, நகர போலீஸ் கமி‌ஷனர் பிரவீன் சூட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்