உளுந்தூர்பேட்டை அருகே விவசாயி வீட்டில் ரூ.1½ லட்சம் நகை–பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயி வீட்டில் ரூ.1½ லட்சம் நகை–பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-04-18 22:45 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கம் மகன் முருகன் (வயது 46), விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது அவர் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்குள்ள ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. திருடு போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நகை, பணம் திருட்டு

இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகன் தனது வீட்டை பூட்டி, சாவியை கதவின் மேல் வைத்துவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

பின்னர் அங்குள்ள ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து முருகன் திருநாவலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்