விளம்பர பதாகையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கைக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல்
விளம்பர பதாகையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
கண்டமங்கலத்தை அடுத்த பாக்கம் கூட்டுசாலை அருகில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கடந்த 13–ந் தேதி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பர பதாகைகளில் ஒரு விளம்பர பதாகையை நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி விட்டனர். இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8.30 மணியளவில் அங்குள்ள மெயின் ரோட்டில் திரண்டனர்.
சாலை மறியல்தொடர்ந்து, அவர்கள் காலை 8.50 மணியளவில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளம்பர பதாகையை கிழித்து சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இந்த மறியல் காரணமாக கண்டமங்கலம்– புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்–இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விளம்பர பதாகையை சேதப்படுத்தியவர்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினார்கள். இதையடுத்து அவர்கள் அனைவரும் காலை 9.20 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.