சேலத்தில் 7 இடங்களில் டாஸ்மாக் கடைகள் முன்பு பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை

பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சேலத்தில் 7 இடங்களில் டாஸ்மாக் கடைகள் முன்பு நேற்று பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2017-04-18 23:00 GMT

சேலம்,

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நேற்று மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, சேலம் மாநகரில் 7 இடங்களில் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலம் பெரமனூர் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜனதா மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து கோபிநாத் கூறும்போது, ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சேலம் மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடத்தில் அமைக்க கூடாது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்‘ என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் சென்னகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வருவாய் அலுவலரிடம் மனு

இதேபோல், சேலம் சொர்ணபுரியில் மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமையிலும், ஆனந்தா இறக்கம் அருகே மாநில செயற்குழு உறுப்பினர் ரகுபதி தலைமையிலும், கன்னங்குறிச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை தலைமையிலும், குகை சிவனார் தெருவில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் தலைமையிலும், சீலநாயக்கன்பட்டி வேல்நகரில் மாவட்ட துணைத்தலைவர் நாச்சிமுத்து ராஜா தலைமையிலும், சிவதாபுரம் சித்தர் கோவில் மெயின் ரோட்டில் மாவட்ட துணைத்தலைவர் பாலு தலைமையிலும் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பா.ஜனதாவினர் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் சந்து கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. எனவே சந்து கடைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்