ராயக்கோட்டையில் பயங்கரம் மளிகை கடைக்காரர் சரமாரியாக வெட்டிக் கொலை கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நடந்ததா? போலீஸ் விசாரணை
ராயக்கோட்டையில் மளிகை கடைகாரர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ராயக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கடை வீதி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 53). இவர் கடைவீதியில் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேணுகா. இவர்களின் மகன் கணேஷ்குப்தா (19). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் ராஜேஷ் என்ற மாணவரும் படித்து வருகிறார். இவர் அடிக்கடி கணேஷ்குப்தாவின் வீட்டிற்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதன் பிறகு அவர் திடீரென்று கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
வெட்டிக் கொலைநேற்று கோவிந்தன், அவரது மனைவி, மகன் ஆகியோர் வீட்டில் இருந்தனர். காலை 6 மணி அளவில் அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் கோவிந்தனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவருக்கு தலை, கழுத்து, காது உள்பட பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி ரேணுகா மகன் கணேஷ்குப்தா ஆகியோர் அங்கு சென்றனர்.
அப்போது அங்கு கணேஷ்குப்தாவுடன் படித்து வந்த மாணவர் ராஜேஷ் மற்றும் 2 பேர் இருந்தனர். அவர்களில் ராஜேஷ், கணேஷ்குப்தாவின் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதே போல கணேஷ்குப்தா திரும்ப தாக்கியதில் ராஜேஷ் தலையிலும் காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் ராஜேசுடன் வந்த மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் காயம் அடைந்த கணேஷ்குப்தா, ராஜேஷ் ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணைஇந்த கொலை பற்றி தகவல் அறிந்ததம் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலையுண்ட கோவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தனின் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை நடந்ததா? அல்லது ராஜேஷ், கணேஷ்குப்தா ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். ராயக்கோட்டையில் மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.