அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.30 கோடி மோசடி அ.தி.மு.க. பிரமுகர் கைது
அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.30 கோடி மோசடி
சேலம்,
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2015–ம் ஆண்டு டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். அந்த காலக்கட்டத்தில் சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திலும் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கணேசன்(வயது34) என்பவர், சேலம் மாவட்டத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் தெரிவித்தார். இவர் தனியார் பஸ் ஒன்றில் கண்டக்டராக பணியாற்றியவர். மேலும் அ.தி.மு.க. பிரமுகர் ஆவார். அதாவது, அமைச்சர்கள், அதிகாரிகள் தனக்கு நன்கு தெரியும் என்றும், அதனால், குறிப்பிட்ட தொகை கொடுத்தால் எளிதாக வேலை கிடைக்கும் என்றும் கணேசன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் சூப்பிரண்டிடம் மனுஅதை உண்மை என நம்பி வாழப்பாடி அருகே உள்ள கொட்டவாடியை சேர்ந்த பாலாஜி, சேலம் நெத்திமேட்டை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் டிரைவர், கண்டக்டர்கள் பணிக்காக ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கொடுத்தனர். பின்னர் இவர்கள் இருவரும் தனக்கு தெரிந்தவர்களிடமும் கூறினர். அதன்படி 40–க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.6 லட்சம் என தொகையை கணேசன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை.
இது தொடர்பாக பாலாஜி, சதீஷ்குமார் ஆகியோர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனிடம் புகார் மனு கொடுத்தனர். அவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் அ.தி.மு.க. பிரமுகர் கணேசனை தேடிவந்தனர்.
சொகுசு பஸ் வாங்கினார்இந்த நிலையில் நேற்று ஆத்தூர் அருகே பதுங்கி இருந்த கணேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறியும், தனக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்பு இருப்பதால் எளிதாக வேலை வாங்கித்தரமுடியும் என உறுதி அளித்து ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுவரை புகார் அளித்த 2 பேரின் சிபாரிசின் பேரில் 40–க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.1 கோடியே 30 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதுபோல இடைத்தரகர்கள் மூலம் மேலும் பலரிடம் ரூ.10 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, கணேசனிடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்தார்.
முடக்க திட்டம்அத்துடன் மோசடி செய்த பணத்தில் சொகுசு பஸ் ஒன்று வாங்கி வழித்தடத்தில் இயக்கி வந்ததும், மீதம் உள்ள பணத்தை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்ததும் தெரியவந்தது.
அடுத்த கட்டமாக கணேசன் மோசடி செய்த பணத்தில் வாங்கிய பஸ் மற்றும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் கணேசன் அ.தி.மு.க. பிரமுகர் என்பதால், வேலை வாங்கி தருவதாககூறிய மோசடியில் அ.தி.மு.க.வை சேர்ந்த வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.