போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே பயங்கரம்: முன்னாள் வட்டார காங்கிரஸ் பிரமுகர் படுகொலை

வில்லியனூரில், மோட்டார் சைக்கிளில் சென்ற முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவரை மர்ம கும்பல்;

Update: 2017-04-17 23:15 GMT

வில்லியனூர்,

கத்தி மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலேயே நடந்த இந்த படுகொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர்

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன் (வயது 43) ஊசுடு தொகுதி முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் இரண்டு பேருடன் வில்லியனூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றார். நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மாயவன், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவருடைய நண்பர்கள் 2 பேரும் உடன் வந்தனர்.

வில்லியனூரை தாண்டி கூடப்பாக்கம் செல்லும் வழியில் ரெயில்வே கேட் அருகே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சென்றபோது, தனது மோட்டார் சைக்கிளை ரோடு ஓரமாக நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழிக்கச் சென்றார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், திடீரென மாயவனின் தலையில் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதைப்பார்த்த மாயவனின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை நோக்கி ஓடிவந்தனர். அப்போது, மாயவனை தாக்கிய கும்பல், அவருடைய நண்பர்களை பார்த்து கத்தியைக் காட்டி மிரட்டியது, உயிர்மேல் ஆசை இருந்தால் அங்கிருந்து ஓடிவிடும்படி எச்சரித்து மிரட்டியது.

சரமாரியாக தாக்கி கொலை

பின்னர் அந்த கும்பலில் இருந்த மர்ம நபர்கள் மீண்டும் மாயவனை கத்தியாலும், ஆயுதங்களாலும் சரமாரியாக தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த மாயவன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாகச் செத்தார். உடனடியாக அவரை தாக்கிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

இதுபற்றி அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் வில்லியனூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் புதுச்சேரி மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி, வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர்கள் வேலய்யன், சத்திய நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

படுகொலை செய்யப்பட்டு கிடந்த மாயவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த படுகொலை பற்றி தகவல் பரவியதும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. அதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மாயவன் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த படுகொலை குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயவனை படுகொலை செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

குடும்பம்

படுகொலை செய்யப்பட்ட மாயவனுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி விமலா மூலம் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இரண்டாவது மனைவி பிரியா மூலம் ஒரு மகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்