வீட்டு குழாய் இணைப்புகளில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை

வீட்டு குழாய் இணைப்புகளில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2017-04-17 22:49 GMT

புதுச்சேரி,

புதுவையில் கடந்த ஆண்டு எதிர்பார்த்தபடி பருவமழை பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

கடும் வறட்சி காரணமாக தமிழக மாவட்டங்களில் குடிநீருக்குக்கூட மக்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற நிலை புதுச்சேரியில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பொதுப்பணித்துறை கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது.

குடிநீர் தட்டுப்பாடு

கூட்டத்துக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் மிகிர்வரதன், தலைமை பொறியாளர் சுவாமிநாதன், குடிநீர்பிரிவு செயற்பொறியாளர் கன்னியப்பன் மற்றும் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடும் நடவடிக்கை

புதுவையில் மக்களுக்கு தேவையான அளவுக்கு சுத்தமான குடிநீரை அரசு தருகிறது. கோடைக்காலத்திலும் தடையின்றி தண்ணீர் வழங்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுதொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளோம்.

இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனை நிறைவேற்றிட பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். குடிநீரை வீணடிக்கக்கூடாது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுப்பணித்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். கூடுதலாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசித்துள்ளோம்.

வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பில் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் வழங்கும் நேரத்தை குறைப்பது குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

மேலும் செய்திகள்