புழல் அருகே சீட்டு பணத்தகராறில் பெண் வெட்டிக்கொலை மதுரைக்கு பஸ்சில் தப்பி ஓட முயன்ற கணவன்–மனைவி தாம்பரத்தில் கைது

புழல் அருகே பட்டப்பகலில் சீட்டு பணத்தகராறில் ஓடஓட விரட்டி பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2017-04-17 22:16 GMT

செங்குன்றம்,

கொலை செய்த கணவன்–மனைவி இருவரும் தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு பஸ்சில் தப்பி ஓட முயன்றபோது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சீட்டு பணத்தகராறு

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் ராமலிங்கநகர் 1–வது தெருவை சேர்ந்தவர் வேலு(வயது37). கொத்தனார். அவரது மனைவி காமாட்சி(30). இவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு அஸ்வினி(12), ஐஸ்வர்யா(7) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

புத்தகரம் பாலவிநாயகர் 2–வது தெருவை சேர்ந்தவர் கணேசன். அவரது மனைவி நாகவள்ளி(40). இவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். மேலும் வட்டிக்கு பணமும் கொடுத்து வருகிறார். இவரிடம் காமாட்சி ஏலச்சீட்டு போட்டார். சீட்டு எடுத்த பின்னர் காமாட்சி அதற்கான பணத்தை கொடுக்காமல் இருந்து வந்தார். இந்த வகையில் காமாட்சி அவருக்கு ரூ.90 ஆயிரம் பாக்கி வைத்து இருந்தார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கொலை செய்வதாக மிரட்டல்

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை காமாட்சி வீட்டு வேலை முடித்து விட்டு அவர்களது வீடு அருகே நடந்து வந்தார். அப்போது சீட்டுப்பண பாக்கியை கேட்டு கணவன்–மனைவி இருவரும் அவரிடம் தகராறு செய்தனர். அப்போது காமாட்சியிடம் அவர்கள் ‘இன்னும் 10 நாட்களுக்குள் பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவோம்’ என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காமாட்சி புழல் போலீசில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் இருதரப்பினரையும் நேற்று மாலை 5 மணி அளவில் விசாரணைக்கு வருமாறு அழைத்து இருந்தனர்.

ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று மாலை 4.45 மணி அளவில் காமாட்சி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் பாலவிநாயகர் கோவில் அருகே நடந்து வந்தபோது, அவரை கணேசனும், நாகவள்ளியும் வழிமறித்து காமாட்சியிடம் தகராறு செய்தனர். அப்போது காமாட்சி ‘இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் அழைத்து உள்ளார்கள். நீங்கள் அங்கு வாருங்கள். அங்கு பேசிக்கொள்ளலாம்’ என்றார். உடனே கணவன்–மனைவி இருவரும் ‘எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் எங்கள் மீதே போலீசில் புகார் கொடுப்பாயா? எனக்கூறி அவரிடம் சண்டை போட்டனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த கணவன்–மனைவி இருவரும் தங்களிடம் இருந்த அரிவாளால் காமாட்சியின் தலை மற்றும் முகத்தில் வெட்டியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த காமாட்சி ரத்தவெள்ளத்தில் ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என சத்தம் போட்டவாறு ஓடினார். ஆனாலும் ஆத்திரம் தீராக கணேசனும், நாகவள்ளியும் அவரை ஓடஓட விரட்டி சென்று வெட்டினார்கள்.

இதில் ரத்த வெள்ளத்தில் காமாட்சி பாலவிநாயகர் கோவில் பிரதான சாலையில் விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தாம்பரத்தில் சிக்கிய கொலை தம்பதி

காமாட்சியை வெட்டி கொலை செய்த கொலை தம்பதிகளான கணேசனும் நாகவள்ளியும் மதுரைக்கு தப்பி செல்வதற்காக தாம்பரத்திற்கு சென்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து புழல் போலீசார் அங்கு விரைந்து சென்று மதுரைக்கு செல்வதற்காக பஸ்சில் இருந்த கணேசனையும் நாகவள்ளியையும் கைது செய்தனர். அவர்களை புழல் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்