அ.தி.மு.க. அணிகள் இணைய எந்த நிபந்தனையும் இல்லை ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க. அணிகள் இணைய பேச்சுவார்த்தைக்கு வந்தால் தயாராக இருக்கிறோம்.

Update: 2017-04-17 23:45 GMT

ஆலந்தூர்,

அதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்று முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

எங்களுக்கே இரட்டை இலை

முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விசாரணை நடக்கிறது. கண்டிப்பாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்.

டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து முழு விவரம் தெரிந்த பின்னர் கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இணைய நிபந்தனை இல்லை

‘அ.தி.மு.க. அணிகள் இணையும் என்றும், நீங்கள் பொதுச்செயலாளர் ஆக்கப்படுவீர்கள் என்றும் கூறப்படுகிறதே?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:–

அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது தொடர்பாக இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. இணைவது தொடர்பாக யாரும் அணுகி பேச்சுவார்த்தைக்கு வந்தால் தயாராக இருக்கிறோம்.

அவர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன். இணைவதற்கு எந்த நிபந்தனையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்

மேலும் செய்திகள்