சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்த சிறுவர்–சிறுமிகள் 12 பேர் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்த சிறுவர்–சிறுமிகள் 12 பேரை அதிகாரிகள் மீட்டனர். அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2017-04-17 22:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. அத்துடன், நாடோடி இன மக்களும் (நரிக்குறவர்கள்) படையெடுத்து உள்ளனர். இவர்கள் சாலையோரங்களில் ஊசி, பாசிமணிகள் விற்பது, பச்சை குத்துவது போன்ற பலவிதமான வியாபாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் பிள்ளைகள் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து வருகிறார்கள். இந்த சிறுவர், சிறுமிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து அவர்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து பிச்சை கேட்பதாகவும், அவர்கள் வைத்திருக்கும் உணவு பொருட்களை பறித்துக்கொண்டு சென்று விடுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றன.

இதைதொடர்ந்து, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கன்னியாகுமரியில் பிச்சை எடுக்கும் சிறுவர், சிறுமிகளை மீட்டு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட்டார்.

12 பேர் மீட்பு

இதையடுத்து ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக புறத்தொடர்பு அலுவலர் தங்கம், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் திவான், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜன், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் போலீசார் நேற்று கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அதிரடி ரோந்து மேற்கொண்டனர். அப்போது, கடற்கரையில் பிச்சை எடுத்த சிறுவர்–சிறுமிகள் 12 பேரை மீட்டனர்.

இதை பார்த்த நாடோடி இன மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்கள் பிள்ளைகளை விடுவிக்குமாறு கூறினர். ஆனால், அதிகாரிகள் அந்த சிறுவர்–சிறுமிகளை வேனில் ஏற்றி சென்று கன்னியாகுமரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து, அவர்களை கொட்டாரம், அச்சன்குளம், மகாராஜபுரம், பொற்றையடி போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் கல்வி இயக்க பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்