திருச்சிற்றம்பலம் அருகே ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை- ரூ.1 லட்சம் கொள்ளை

திருச்சிற்றம்பலம் அருகே ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை-ரூ.1½ லட்சத்தை மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2017-04-17 23:00 GMT
திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள தெற்கு ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி கண்ணகி. இவர்களுடைய மகன் கவிமணி (வயது30). மகள் கஸ்தூரி. கவிமணி அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் தாளாளராகவும், ஆசிரியராகவும் உள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 10 மணி அளவில் தனது தாயார் கண்ணகி, தங்கை கஸ்தூரி ஆகியோருடன் கவிமணி வீட்டில் இருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 4 பேர், வீட்டுக்குள் புகுந்து உள்பக்கமாக தாழ்பாள் போட்டனர்.

பின்னர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வீட்டில் இருக்கும் நகை, பணத்தை எடுத்து வரும்படி கவிமணி உள்ளிட்ட 3 பேரையும் மிரட்டினர். அப்போது கவிமணியின் தாய் கண்ணகி, மர்ம நபர்களை பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்களில் ஒருவன், கண்ணகியின் காலில் கத்தியால் குத்தினான். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

காரில் தப்பி சென்றனர்

இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் கண்ணகி, கஸ்தூரி ஆகியோர் அணிந்திருந்த 12 பவுன் நகைகளை பறித்து கொண்டனர். பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தையும் கொள்ளையடித்தனர். அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் கீழே சிதறி விழுந்தன. கொள்ளையடித்த நகை மற்றும் பணத்துடன் மர்ம நபர்கள் 4 பேரும் வீட்டின் அருகே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி தப்பி சென்றனர். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், பட்டுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மேனன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை

திருச்சிற்றம்பலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த பலர் கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். கவிமணியின் வீட்டு கட்டுமான பணிகளை வடமாநில தொழிலாளர்களே செய்துள்ளனர். இவர்களுக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். தெற்கு ஒட்டங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளையடிக்க வந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காலில் படுகாயம் அடைந்த கண்ணகி, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் செய்திகள்