2 கொலை வழக்குகளில் கைதான 7 பேர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை

காஞ்சீபுரத்தில் 2 கொலை வழக்குகளில் கைதான 7 பேர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மீண்டும் சிறையில் அடைப்பு

Update: 2017-04-17 23:00 GMT

காஞ்சீபுரம்

காஞ்சீபுரத்தில் நடந்த 2 கொலை வழக்குகளில் கைதான 7 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2 கொலைகள்

காஞ்சீபுரத்தில் கடந்த 5–ந்தேதி சட்டக்கல்லூரி மாணவர் சந்திரசேகரனும், மறுநாள் 6–ந்தேதி தே.மு.தி.க. தலைமை கழக பேச்சாளர் சரவணனும் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு கொலை வழக்குகள் தொடர்பாகவும் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.

மேலும் சிலர் காட்பாடி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர்.

போலீஸ் காவலில் விசாரணை

சட்டக்கல்லூரி மாணவர் சந்திரசேகரன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காஞ்சீபுரத்தை சேர்ந்த தணிகா என்ற தணிகைவேல் (வயது 35), வசு என்ற வசந்த் (23), அருண் என்ற அருண்பாண்டியன் (23) ஆகிய 3 பேரையும், தே.மு.தி.க. தலைமை கழக பேச்சாளர் சரவணன் கொலை வழக்கில் தொடர்புடைய காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபாகரன்(25), சுரேஷ் என்ற காக்கா சுரேஷ்(26), கோகுல் என்ற ஜெயகிருஷ்ணன்(25), கார்த்தி என்ற கருப்பு கார்த்தி (25) ஆகிய 4 பேரையும் பெரிய காஞ்சீபுரம் போலீசார் தனித்தனியாக போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அதில் தணிகா என்ற தணிகைவேலிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தியையும், பிரபாகரன் என்பவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

விசாரணைக்கு பிறகு இரண்டு கொலை வழக்குகளிலும் கைதான 7 பேரையும் போலீஸ் காவல் முடிந்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, கோர்ட்டு உத்தரவின்படி மீண்டும் அவர்களை வேலூர் சிறையில் அடைத்தனர்.

7 பேரிடமும் நடத்திய விசாரணையில் 2 கொலை வழக்குகளிலும் சம்பந்தமான முக்கியமான தகவல்கள் கிடைத்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்