ஸ்கூட்டரில் சென்ற பள்ளி ஆசிரியையிடம் 6½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மணப்பாறை அருகே ஸ்கூட்டரில் சென்ற அரசு பள்ளி ஆசிரியையிடம் 6½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

Update: 2017-04-17 22:15 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மேலமஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் சகாயசெல்வமேரி(வயது 45). இவர் தாதகவுண்டம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தினமும் காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இதே போல் நேற்று காலை ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். பொய்கைப்பட்டி அருகே ஆமணக்கம்பட்டி சாலையில் உள்ள தண்ணீர்தொட்டி எதிரே சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஸ்கூட்டர் மீது மோதினார். இதில் ஆசிரியை சகாயசெல்வமேரி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

தங்க சங்கிலி பறிப்பு

உடனே அந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி சகாயசெல்வமேரியின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.

இதையடுத்து சகாயசெல்வமேரி திருடன், திருடன் என சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டனர். மேலும் மோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபரை விரட்டிச் சென்ற போது அவர் அனைவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி தப்பிச் சென்றார்.

பின்னர் அந்த பகுதி மக்கள் இதுபற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற மர்ம நபரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவன் சிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி ஆசிரியையிடம் தாலிச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் மணப்பாறைபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்