குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்த பெண்கள்
தாராபுரம், பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தாராபுரம் தாலுகா நந்தவனம்பாளையம் வெருவேடம்பாளையம், நாவிதன்புதூர் பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நாங்கள் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள். 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை படித்து வரும் குழந்தைகளுக்கு கூட குடிக்க குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறோம். குடிநீருக்காக அருகே உள்ள தோட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தேடி அலைவதால் தினக்கூலியாக வேலை செய்யும் நாங்கள் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை.
மேலும், சரியான ரோடு வசதியும், கழிப்பிட வசதியும் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருமலைநகர்இதுபோல் பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலைநகர் பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அளித்த மனுவில், திருமலைநகர் பகுதியில் கடந்த 1 வருடமாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீருக்காக கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். லாரிகள் மூலமாக எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அதுவும் வழங்கப்படவில்லை. எங்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.