மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; விவசாயி பலி

பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். உழவர் சந்தைக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

Update: 2017-04-17 22:30 GMT

பல்லடம்

திருப்பூர் பல்லடம் சாமிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 34). விவசாயி. பாலகிருஷ்ணன் தனது தோட்டத்தில் கொத்தமல்லி சாகுபடி செய்து இருந்தார்.

இவற்றை தினமும் அறுவடை செய்து பல்லடம் உழவர் சந்தைக்கு கொண்டு சென்று பாலகிருஷ்ணன் விற்று வருவது வழக்கம். அதுபோல், நேற்று அதிகாலையில் அறுவடை செய்த கொத்தமல்லி கட்டுகளை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பல்லடம் உழவர் சந்தைக்கு வந்து கொண்டு இருந்தார். அவருடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் தணிகாசலம், கணேசன் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.

பரிதாப சாவு

அதிகாலை 3.30 மணி அளவில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே அவர்கள் வந்த போது, அந்த வழியாக சென்ற ஒரு கார், பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். உடனே அவருடன் வந்தவர்கள், அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்